ராமேஸ்வரம் : ராமநாதசுவாமி கோவிலில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதால் குறைந்த பக்தர்கள் வருகை, இதனால் கடந்த மாதத்தினை விட உண்டியல் காணிக்கை வருவாயும் குறைந்துள்ளது.
தீர்த்தம் மூர்த்தி ஸ்தலம் என மூன்று பெருமைகளையும் கொண்டு காசிக்கு நிகரான புண்ணிய ஸ்தலமாக இருந்து வருகிறது ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோவில். இந்த ஆலயத்தில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தால் பாவங்கள் நீங்கும் என்ற ஐதீகம் உள்ளது.
இதனால் தமிழகம் மட்டுமின்றி நாடுமுழுவதும் இருந்து தினமும் 5,000 ஆயிரம் முதல் 10,000 வரை பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு உண்டியல்களில் காணிக்கைகளும் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், கிழக்கு கோபுர மண்டபத்தில் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள உண்டியல்கள் மற்றும் உபகோவில்களில் உள்ள உண்டியல் காணிக்கை அனைத்தும் பெறப்பட்டு எண்ணும் பணி நடைபெற்றது. இதில் கோவில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் திரளானோர் கலந்து கொண்டனர் எண்ணினர்.
உண்டியல் காணிக்கை அனைத்தும் எண்ணும் பணி நிறைவு பெற்றதில் ஒரு கோடியே பதினைந்து லட்சத்து பத்தொண்பதாயிரத்து இருநூற்று நான்கு ரூபாய் பணம், 71 கிராம் 500 மில்லி தங்கம், 4 கிலோ 80 கிராம் வெள்ளி, 113 வெளிநாட்டு பணங்கள் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்ததால், பக்தர்கள் வருகை குறைந்தது. இதனால், கடந்த மாதத்தினை விட உண்டியல் காணிக்கை குறைந்துள்ளதாக கோவில் பணியாளர்கள் தெரிவித்தனர்.