சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்திற்கு ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனர். இந்நிலையில் ஐந்துரதம் புரதான சின்னம் அருகே காரில் 2 பெண்கள் உள்பட 4 பேர் கொண்ட குடும்பத்தினர் வந்துள்ளனர். அங்குள்ள நோ பார்க்கிங் வழியாக காரை நிறுத்த முயன்றனர்.
இதனால், அங்கு பணிபுரிந்து வந்த காவலாளி ஏமுமலை, அருகில் உள்ள பார்க்கிங்கில் நிறுத்துமாறும், NO ENTRY வழியாக கார் செல்லக்கூடாது என்றும் கூறி காரை நிறுத்தினார். ஆனால், காரில் இருந்தவர்கள், தனியார் காவலரை இடித்து தள்ளுவது போல், NO ENTRY வழியே செல்ல முயன்றனர். இதனால் காரில் வந்தவர்களை பார்க்கிங் ஊழியர்கள் திட்டியதாக கூறப்படுகிறது.
அதன்பின் காரில் இருந்து இறங்கிய 2 பெண்கள் தகாத வார்த்தைகளால் திட்டுவதாக கூறி ஆத்திரமடைந்து ஏழுமலையை நடுரோட்டில் அடித்து உதைத்தனர். மேலும், அவர்களுடன் காரில் இருந்த 2 பேரும் காவலாளியை கடுமையாக தாக்கியுள்ளனர். 4 பேரும் பாதுகாவலரிடம் இருந்து பிளாஸ்டிக் பைப்பை பிடுங்கி குழாய் உடைக்கும் வரை தாக்கியுள்ளனர்.
மேலும் அவரது சட்டையை கிழித்து தவறாக நடந்து கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், காவலாளியை தாக்கிய 2 பெண்கள் உள்பட 4 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். வீடியோ ஆதாரம் மூலம் அவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.