சென்னை: சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. தஞ்சாவூர்-ஒரத்தநாடு பகுதியில் உள்ள அவரது வீடு, சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் உள்ள அவரது அறை மற்றும் அவரது மகன் வீடு ஆகியவற்றில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி வழங்குவதற்காக ரூ.27.90 கோடி லஞ்சம் வாங்கியதாக வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், தற்போது அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. 2011 முதல் 2016 வரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு சென்னை பெருங்களத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட தனியார் நிறுவனம் திட்ட அனுமதி கோரியபோது, அப்போது அமைச்சராக இருந்த வைத்திலிங்கத்துக்கு ரூ.27.90 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
அதில், வைத்திலிங்கத்தின் மகன்கள் பிரபு, சண்முக பிரபு ஆகியோர் இயக்குநராக இருந்த நிறுவனத்துக்கு லஞ்சப் பணம் கடனாக வழங்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. அந்த பணத்தில் பல இடங்களில் சொத்துக்கள் வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்தப் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் விசாரணை நடத்தி, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அவரது மகன்கள் பிரபு, சண்முகபிரபு, பன்னீர்செல்வம், தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த ரமேஷ் உள்ளிட்ட 11 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான இவர், கடந்த சட்டசபை தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.