சென்னை: சென்னை அருகே திருவேற்காட்டில் உள்ள கோலடி ஏரியை ஆக்கிரமித்து குடியிருப்பு கட்டிடங்கள் கட்டுவது தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் தன்னிச்சையாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், இந்த விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார்.
அந்த பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வசித்து வருவதாகவும் அவர் கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ”20 ஆண்டுகளாக இல்லை, சோழர்கள் காலத்தில் இருந்தே ஆக்கிரமிப்புகள் இருந்தாலும் அகற்ற வேண்டும். முன்பு, 162 ஏக்கர் பரப்பளவில் இருந்த இந்த ஏரி, தற்போது சுருங்கி விட்டது.
அப்பகுதி மக்கள் சார்பில் ஆஜரான வக்கீல் ம.கௌதமன், முறையான பட்டா வழங்கப்பட்டு, அப்பகுதி மக்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இப்பிரச்னையில் அவர்களின் கருத்துகளை கேட்க வேண்டும்,” என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘மழைக்காலத்தில் பாதிக்கப்படுவது அந்தப் பகுதி மக்கள்தான் என்று கருதி, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துச் சென்றுள்ளோம்’’ என்று கூறி, அப்பகுதி பொதுமக்களையும் இணைத்து வழக்கில் ஆஜராக உத்தரவிட்டனர்.
மேலும், இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக மூத்த வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரத்தை நியமித்த நீதிபதிகள் விசாரணையை நவம்பர் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.