சென்னை: வரும் 31-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக மூன்று நாட்களுக்கு 11,176 சிறப்பு பேருந்துகள், ஒப்பந்த தனியார் பேருந்துகள் மற்றும் சிறப்பு ஆம்னி பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து சொந்த வாகனம், வாடகை வாகனங்களில் செல்வோர் உள்பட 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் செல்வார்கள் என தெரிகிறது. இவ்வழியாக செல்லும் மக்கள், சுங்கச்சாவடிகளில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. குறிப்பாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் பண்டிகைக் காலங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம்.
இங்கு ஃபாஸ்டேக் வசதி இருந்தாலும் ஸ்கேன் செய்வதில் சில நேரங்களில் தாமதம் ஏற்படுவதால், பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, பண்டிகையின் போது கட்டணச் சாவடிகளில் இலவசப் பயணத்தை அனுமதிக்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்படி, சுங்கச்சாவடி மேலாளர்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை மண்டல தலைமையகத்தில் இருந்து மற்றவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:- வாகனங்கள் அதிகளவில் செல்லும் பகுதியில் சுங்கச்சாவடி எண்ணிக்கையை அதிகரிக்கவும், மற்ற பகுதிகளில் கட்டணம் வசூலிக்கும் கவுன்டர் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். கூடுதல் ‘ஸ்கேனிங்’ கருவிகளைப் பயன்படுத்த வேண்டும். அதன்படி பணியாளர்களை ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆயுதபூஜை முடிந்து சென்னை திரும்பும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட போது, சுங்கச்சாவடிகள் வழியாக வாகனங்கள் இலவசமாக செல்ல அனுமதிக்கப்பட்டது. அதேபோல், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாத சூழலில், சுங்கச்சாவடிகளில் கட்டணமில்லா பயணத்தை அனுமதிக்க அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு கூறினார்கள்.