சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் நடத்தும் டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 8-வது சீசன் ஜூலை 5-ம் தேதி தொடங்குகிறது.
இந்த தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடரில் உள்ளூர் வீரர்களின் திறமையை கண்டறிய மொத்தம் 32 போட்டிகள் நடைபெறவுள்ளன. இறுதிப் போட்டி ஆகஸ்ட் 4-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.
திருநெல்வேலி, நத்தம், சேலம், கோவை ஆகிய இடங்களில் லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. லீக் போட்டிகள் ஜூலை 5-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடக்கிறது.
பிளே ஆஃப் சுற்றின் இரண்டு போட்டிகள் (குவாலிபையர் 1, எலிமினேட்டர்) 30 மற்றும் 31-ம் தேதிகளில் நாத் மைதானத்தில் நடக்கிறது. குவாலிபையர் 2 மற்றும் இறுதிப் போட்டி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 5-ம் தேதி சேலத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் vs லைக்கா கோவை கிங்ஸ். இந்நிலையில் நேற்று சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் அசோக் சிகாமணி, துணைத் தலைவர் ஆடம் ஷேட், கவுரவ செயலாளர் பழனி, கவுரவ இணைச் செயலாளர் சிவக்குமார், கவுரவ உதவிச் செயலாளர் ஆர்.என்.பாபா, ஐஓபி நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான அஜய்குமார் ஸ்ரீவத்சவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.30 லட்சம் வழங்கப்படும். 3-வது மற்றும் 4-வது இடம் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும்.