சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, புது ஆடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க, தி.நகர் உள்ளிட்ட கடை வீதிகளில் நேற்று லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர். குற்றச் செயல்களைத் தடுக்க சென்னையில் நேற்று 18 ஆயிரம் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வரும் 31-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. நேற்று கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால், புதிய ஆடைகள், நகைகள், பட்டாசுகள் வாங்க ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் வணிக வீதிகளில் குவிந்தனர். குறிப்பாக தியாகராயநகர் ரங்கநாதன் தெரு, பாண்டிபஜார், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், மயிலாப்பூர், பாரிமுனை, திருவான்மியூர் உள்ளிட்ட பல்வேறு வணிக வீதிகளில் உள்ள கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதை எதிர்பார்த்து, சென்னை போலீஸ் கமிஷனர் அருண், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்திருந்தார். கூட்டத்தைக் கட்டுப்படுத்துதல், குற்றச் செயல்களைத் தடுப்பது, போக்குவரத்து நெரிசலைத் தடுக்க வாகனங்களை ஒழுங்குபடுத்துதல் ஆகிய 3 பணிகளாகப் பாதுகாப்புப் பணிகள் நடைபெற்றன.
சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, ஊர்க்காவல் படை உள்ளிட்ட 18,000 போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். நெரிசலை கட்டுப்படுத்த தியாகராயநகரில் 17, வண்ணார்பேட்டையில் 3, புரசைவாக்கத்தில் 3, பூக்கடையில் 4 தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டன. இங்கு போலீசார் சுழற்சி முறையில் 21 பைனாகுலர் மூலம் நேரடியாக கண்காணித்தனர்.
மேலும், ஒலிபெருக்கி மூலம் திருட்டு குற்றங்களை தடுக்க அறிவுறுத்தப்பட்டது. தியாகராயநகர், பாண்டிபஜார் பகுதிகளில் பெண்களின் கழுத்தில் கிடந்த தங்க நகைகள் திருடப்படாமல் பாதுகாக்க 10,000 துணி கவசம் இலவசமாக வழங்கப்பட்டது. வண்ணாரப்பேட்டை தியாகராயநகரில் கூடுதலாக 42 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதேபோல் தியாகராயநகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பூக்கடை பகுதிகளில் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், காணாமல் போன சிறுவர், சிறுமிகளை உரியவர்களிடம் ஒப்படைக்கவும் 5 தற்காலிக கட்டுப்பாட்டு அறைகளும், 10 தற்காலிக உதவி மையங்களும் அமைக்கப்பட்டன.
மேலும், தியாகராயநகர் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் எண் 73585 43058, புரசைவாக்கம் கட்டுப்பாட்டு அறை செல்போன் எண் 78248 67234, பூக்கடை கட்டுப்பாட்டு அறை 81223 60906 என்ற செல்போன் மூலம் தொடர்பு கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. தியாகராயநகர், பூக்கடைகள் 4 பேர் மூலம் கண்காணிக்கப்பட்டது. வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகள் மற்றும் நெரிசலான இடங்களிலும் 4 ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.