சென்னை: சென்னையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து மைக்ரோசிப் பொருத்தி அதன் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் அதிகரிக்கப்படும் என மேயர் ஆர்.பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சிப் பகுதியில் பொது இடங்களில் சுற்றித்திரியும் மாடு, நாய்களால் ஏற்படும் இடையூறுகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் மேயர் ஆர்.பிரியா தலைமையில் பல்வேறு துறை அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. மேயர் பிரியா கூறியதாவது:
மக்களுக்கு இடையூறு: சென்னையில் சாலை மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளுக்கு முதல் முறை ரூ.5 ஆயிரமும், 2-வது முறை ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படுகிறது. சட்டப் பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தபடி, பிடிபட்ட மாடுகளை 3வது முறையாக ஏலம் விட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாடுகளைப் பிடிப்பதற்காக விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசுக்கு கருத்து: கண்காணிப்பு இல்லாமல் தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிபட்டால், அவற்றை அடையாளம் காண மைக்ரோ சிப் பொருத்தப்பட்டு, அதே மாடு 3வது முறையாக பிடிபட்டால், ஏலம் விடப்படும்.
மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் மாடு வளர்ப்பதற்கும், அவற்றை விடுவதற்கும் தடை விதிக்க சட்ட ஆலோசனை பெறப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும்.
புளியந்தோப்பு, கண்ணம்மாபேட்டை, லாயிட்ஸ் காலனி ஆகிய 3 இடங்களில் ரூ.20 கோடி செலவில் நாய் வளர்ப்பு மையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. மேலும், புதிதாக 2 மையங்கள் தொடங்கப்பட உள்ளன.
7 நாய் பிடிக்கும் வாகனங்களும், நாய்களுக்கு தடுப்பூசி போட 3 வாகனங்களும் வாங்கப்பட உள்ளன. இந்த ஆண்டு தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கால்நடை பராமரிப்பு இயக்குநர் எஸ்.அம்ரிதா ஜோதி, மாநகராட்சி கூடுதல் ஆணையர்கள் வி.ஜெயச்சந்திர பானு ரெட்டி, ஆர்.லலிதா, மாவட்ட துணை ஆணையர்கள் எம்.பி.அமித், கே.ஜே.பிரவீன் குமார், காடா ரவிதேஜா, விலங்குகள் நல வாரிய முதன்மை செயல் அலுவலர் சுரேஷ் சுப்ரமணியம், உறுப்பினர் ஸ்ருதி, இணை ஆணையர் போலீசார் (போக்குவரத்து) மகேஷ்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.