சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகப்பட்டினம் மீனவர்கள் 12 பேரை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று எழுதிய கடிதம்:-
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள், கடந்த 26-ம் தேதி, படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இத்தகைய மீனவர்கள் கைது செய்யப்படுவது இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரத்திற்கும் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை 30 சம்பவங்கள் நடந்துள்ளன. 27-ம் தேதி நிலவரப்படி 140 மீனவர்களும், 200 மீன்பிடி படகுகளும் இலங்கை அரசின் வசம் உள்ளன. எனவே, இப்பிரச்னையை முன்னுரிமை அடிப்படையில் எடுத்துரைத்து, இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.