பெங்களூருவின் மையப் பகுதியான மெஜஸ்டிக் பகுதியில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் தினமும் லட்சக்கணக்கான பயணிகளை வரவேற்கிறது. இந்த முக்கியமான இடத்தில், விதிமீறி நிறுத்தப்படும் தனியார் பஸ்களால், பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நகரின் முக்கிய போக்குவரத்து மையமாக விளங்கும் மெஜஸ்டிக் பகுதியைச் சுற்றியுள்ள சாலைகளில், தனியார் பேருந்துகள் அடிக்கடி நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றிச் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மெஜஸ்டிக் பகுதிகளில் தனியார் பேருந்துகள் தொடர்ந்து நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். இப்பகுதிகளில் நடமாடக்கூட முடியாத சூழ்நிலையை சமாளிக்க வேண்டியுள்ளது. குறுகலான சாலைகளை பஸ்கள் அதிகம் பயன்படுத்துவதால், பிஎம்டிசி பஸ், கால்டாக்சி, இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல உரிமை மறுக்கப்படும் நிலை உள்ளது.
இப்பிரச்னையின் தாக்கம், மெஜஸ்டிக் பகுதி மட்டுமின்றி, அதை சுற்றியுள்ள சாலைகளிலும் பரவி, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை பாதிக்கிறது. இது குறித்து பொது போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டு, மாற்று ஏற்பாடுகளை போக்குவரத்து போலீசார் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், பயணிகளும், பொதுமக்களும் சிரமத்துக்கு ஆளாவதாக புகார் எழுந்துள்ளது.
தனியார் பஸ் டிரைவர்கள் கூறுகையில், “”தனியார் பஸ்களால் பொதுமக்களுக்கு பெரும் நன்மை ஏற்படுகிறது. நீண்ட தூரம் செல்வோர் தனியார் பஸ்களையே அதிகம் நம்புகின்றனர். மற்ற பகுதிகளில் பார்க்கிங் வசதி இல்லாததால், மெஜஸ்டிக்கில் நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. போக்குவரத்துத் துறையில் தனி இடம் ஒதுக்கினால், மெஜஸ்டிக் அருகே வாகனங்களை நிறுத்த வேண்டிய அவசியமில்லை” என்றார்கள்.
இந்த விவகாரத்தில் நிலுவையில் உள்ள சூழ்நிலையை சமாளிக்க அரசும், போக்குவரத்து துறையும் போதிய நடவடிக்கை எடுப்பது பொது போக்குவரத்தை சீராக கையாள உதவும்.