டெல்லி: நாடாளுமன்ற மக்களவை மற்றும் ராஜ்யசபா எம்.பி.க்கள் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்றினார்.
மக்களவையில் இன்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களின் கூட்டுக் கூட்டத்தில் திரெளபதி முர்மு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், லோக்சபா தேர்தலை வெற்றிகரமாக நடத்திய தேர்தல் கமிஷனுக்கு நன்றி தெரிவித்தார்.
பா.ஜ.க. அரசின் கொள்கைகளில் நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்துள்ளனர். பெரும்பான்மை பலத்துடன் கூடிய ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்,” என்றார்.
பெரும்பான்மை பலத்துடன் தான் ஆட்சி அமைத்துள்ளதாக ஜனாதிபதி கூறியதும் எதிர்க்கட்சிகள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், புதிய மருத்துவக் கல்லூரிகள் குறித்துப் பேசும்போது, ’நீட் நீட்’ என்றும், பாதுகாப்புத் துறை பற்றி பேசும்போது “அக்னிவீரன்” என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.
வடகிழக்கு மாநிலங்கள் எங்கும் தொலைத்தொடர்பு வசதி மற்றும் இணைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருவதாகவும், அசாமில் மிகப்பெரிய செமி கண்டக்டர் உற்பத்தி ஆலை அமைக்கப்பட உள்ளதாகவும் குடியரசுத் தலைவர் பேசியபோது, எதிர்க்கட்சிகள் மணிப்பூர், மணிப்பூர் என கோஷங்களை எழுப்பினர்.
மணிப்பூரில் நடந்த வன்முறையில் பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இதற்கிடையில், இந்திரா காந்தியின் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி காலம் குறித்து பேசிய முர்மு, 50 ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் 25 அன்று அவசரநிலை அமல்படுத்தப்பட்டது அரசியல் சாசனத்தின் மீதான நேரடித் தாக்குதல் என்று அவர் கூறியபோதும் எதிர்க்கட்சிகள் கோஷங்களை எழுப்பின.