சென்னை: தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் நவம்பர் 9-ம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கேரள கடலோர மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டலத்தில் குறைந்த சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
அவற்றின் தாக்கம் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் இன்று முதல் நவம்பர் 9-ம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தில் 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.