பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள குடகு, மைசூரு, ஹாசன் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குடகு மாவட்டம், தலைக்காவிரி, பாகமண்டலா, மடிக்கேரி, வீராஜ்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், நேற்று இரவு துவங்கிய மழை ஓய்ந்துள்ளது. இன்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
பள்ளிகளுக்கு விடுமுறை: கனமழை மற்றும் பலத்த காற்றால் நூற்றுக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. சுல்தான்நகர், மல்லிகார்ஜுன் நகர் பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. தொடர் மழையால் காவிரி, கனிகா நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திரிவேணி சங்கமம் வெள்ளத்தில் மூழ்கி கடல் போல் காட்சியளித்தது. மழைநீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியதால், மடிக்கேரி – பகமண்டலா இடையே சாலை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக குடகு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பாகமண்டலாவில் 21 செ.மீ மழையும், மடிகேரியில் 15.8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக கர்நாடக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பு: குடகு மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், காவிரியின் குறுக்கே உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று வினாடிக்கு 3,856 கன அடியாக அதிகரித்துள்ளது. அதேபோல், ஹாரங்கி அணைக்கு 4252 கன அடியாகவும், ஹேமாவதி அணைக்கு 1425 கன அடியாகவும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் பெய்து வரும் கனமழையால் கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மைசூர் கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரத்து 977 கன அடியாக அதிகரித்துள்ளது. கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அந்த அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.