மும்பை: அமலாக்கத்துறையினர் அதிரடி… மஹாராஷ்டிராவில், 975 கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடி வழக்கில் மூன்று சொகுசு கார்கள், உயர் ரக வாட்சுகள் மற்றும் 140க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை அமலாக்கத் துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.
மஹாராஷ்டிராவின் மும்பையை தலைமையிடமாக வைத்து ‘மந்தனா இண்டஸ்ட்ரீஸ்’ என்ற ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் தற்போது ‘ஜி.பி., குளோபல்’ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.இந்த நிறுவனம் பாங்க் ஆப் பரோடாவில், 975.08 கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து வங்கி தரப்பில் சி.பி.ஐ.,யில் புகார் தரப்பட்டது. பணமோசடி வழக்கு என்பதால் இது குறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த நிறுவனத்தின் இயக்குனர்களான புருஷோத்தம் மந்தனா, மனீஷ் மந்தனா, பிஹாரிலால் மந்தனா ஆகியோர் மோசடியான பண பரிவர்த்தனைகள் வாயிலாக வங்கிக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.
நிறுவனத்தின் ஊழியர்களின் பெயரில், போலி நிறுவனங்களை உருவாக்கி, வாங்கிய கடனை முறைகேடாக பயன்படுத்தியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மந்தனா நிறுவனத்துக்கு சொந்தமான மும்பையில் உள்ள, 12 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, மூன்று விலையுயர்ந்த சொகுசு கார்கள், உயர் ரக வாட்சுகள், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி, 5 கோடி ரூபாய் பங்குகள் மற்றும் பத்திரங்கள், ஐந்து லாக்கர்கள், 140க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் அமலாக்கத் துறை அதிகாரிகளால் முடக்கப்பட்டன.