சென்னை: எந்த திசையில் இருந்து யார் வந்தாலும் தி.மு.க.வுக்கே வெற்றி கிடைக்கும். டெல்லியில் இருந்து வந்தாலும் சரி, லோக்கலில் இருந்து வந்தாலும் சரி, தி.மு.க.வுக்கே வெற்றி என்று விஜய்க்கு பதிலடி கொடுப்பது போல் துணை முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டில் வைத்து தன் கட்சி கொள்கைகளை அறிவித்து, தனது அரசியல் மற்றும் கொள்கை எதிரிகள் யார் யார் என்பதை தெளிவாக எடுத்துரைத்தார். அப்போது, தி.மு.க. கட்சியை நடிகர் விஜய் விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் விஜய்யின் மாநாடு நடைபெற்ற விக்கிரவாண்டியை அடுத்த திருவெண்ணெய்நல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் பிறகு பேசிய அவர் நடிகர் விஜய்-க்கு பதிலடி கொடுத்தார்.
“எந்த திசையில் இருந்து யார் வந்தாலும் தி.மு.க.வுக்கே வெற்றி கிடைக்கும். டெல்லியில் இருந்து வந்தாலும் சரி, லோக்கலில் இருந்து வந்தாலும் சரி, தி.மு.க.வுக்கே வெற்றி. 2026 சட்டமன்ற தேர்தலில் எந்தக் கூட்டணி அமைந்தாலும் தி.மு.க.வுக்கே வெற்றி கிடைக்கும்,” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்