சென்னை: சென்னை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
அதன்படி நேற்று இரவு முதல் இன்று காலையில் தொடர்ந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் காலை 6 மணி வரை சராசரியாக 2.5 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக மடிப்பாக்கத்தில் 6 செ.மீ., அடையாரில் 5 செ.மீ., ஆலந்தூர் மற்றும் பெருங்குடியில் தலா 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
சென்னையில் உள்ள 21 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை. மழை தொடர்பான அனைத்து புகார்கள், உதவிகளுக்கு 1913 என்ற உதவி எண்ணை அழைக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தொடர்மழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.