கோவை: கோவையில், லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில், இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் சோதனை நடந்தது. இது தவிர மேலும் இரண்டு இடங்களில் இன்று கூடுதல் சோதனை நடத்தப்பட்டது. சிக்கிம் மாநில அரசின் லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக அச்சடித்து விற்பனை செய்து வருமானம் ஈட்டியதாக கோவையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டின் மீது புகார்கள் எழுந்தன.
இதையடுத்து அவருக்கு சொந்தமான இடங்களில் 2019-ம் ஆண்டு வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், மார்ட்டின் லாட்டரி விற்பனை மூலம் முறைகேடாக ரூ.910 கோடி சம்பாதித்து, 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்தது.
இதையடுத்து, லாட்டரி அதிபர் மார்ட்டினுடன் தொடர்புடைய இடங்களில் 2019, 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் அமலாக்க அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கப்பட்டன. இதனையடுத்து லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
துடியலூர் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மார்ட்டின் வீடு, மார்ட்டின் வீடு, அவரது நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம், ஹோமியோபதி கல்லூரி ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். இரண்டாவது நாளாக இன்றும் சோதனை தொடர்கிறது. இன்று அதிகாலை முதல் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், இன்று கூடுதலாக 2 இடங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனையை தொடங்கினர்.
அதாவது சரவணம்பட்டி அருகே உள்ள சாய்பாபா காலனி மற்றும் சிவானந்தபுரம் ஆகிய இடங்களில் லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லெமாரோஸ் மார்ட்டின் உறவினர்களிடம் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் போது, ஆயுதம் ஏந்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து வீட்டில் உள்ளவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.