கொல்கத்தா: கொல்கத்தா மற்றும் ஹவுராவை இணைக்கும் 81 ஆண்டுகள் பழமையான ஹவுரா பாலத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்வதற்காக 36 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று 5 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஹூக்ளி ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சியின் போது ஹவுரா பாலம் கட்டப்பட்டது. இது இரண்டாம் உலகப் போரின் போது 1943 இல் பயன்படுத்தப்பட்டது. ‘சஸ்பென்ஷன் டைப் பேலன்ஸ்டு கான்டிலீவர்’ பொறியியலைப் பயன்படுத்தி கட்டப்பட்ட இந்த பாலம், உலகின் ஆறாவது நீளமான பாலமாகும்.
இந்த பாலத்திற்கு அருகில் ஹவுரா ரயில் நிலையம் உள்ளது, இது கொல்கத்தாவின் நுழைவாயிலாக கருதப்படுகிறது. இதன் காரணமாக ஹவுரா பாலம் இன்றும் பரபரப்பாக இயங்கி வருகிறது. இந்த பாலத்தை தினமும் ஒரு லட்சம் வாகனங்களும், 1.5 லட்சம் பாதசாரிகளும் பயன்படுத்துகின்றனர்.
போக்குவரத்தை எளிதாக்க ஹவுரா பாலத்தில் இருந்து சிறிது தூரத்தில் வித்யாசாகர் பாலம் கட்டப்பட்டுள்ளது. இருப்பினும் ஹவுரா பாலத்தில் போக்குவரத்து சீரடையவில்லை.
இந்த பாலத்தை நிர்வகிக்கும் பொறுப்பு கொல்கத்தாவில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் கடைசியாக 1983-1988 காலகட்டத்தில் ஹவுரா பாலத்தின் விரிவான ஸ்திரத்தன்மை ஆய்வை நடத்தியது.
கடந்த 36 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று மீண்டும் பாலத்தை ரைட்ஸ் என்ற பொதுத்துறை நிறுவனம் ஆய்வு செய்தது. ஐந்து மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆய்வறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும்.