தெலுங்கு பேசும் பெண்களை அவதூறாகப் பேசியதாக பிரபல தமிழ் திரைப்பட நடிகை கஸ்தூரி ஐதராபாத்தில் காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டார். கடந்த சில நாட்களாக, தெலுங்கு பேசும் பெண்கள் குறித்து தனது பொது உரையாடல்களில் பரபரப்பான கருத்துக்களை பகிர்ந்து வந்தார்.
இந்தக் கருத்துக்கள் மட்டுமின்றி, தெலுங்கர்களைப் பற்றிய ஆபாசமான மற்றும் சர்ச்சைக்குரிய பேச்சு இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தமிழகம் மட்டுமன்றி இந்திய அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கஸ்தூரியின் பேச்சுக்குப் பிறகு, தெலுங்கு பேசும் பெண்கள் மற்றும் தெலுங்கு மக்களைக் குறித்து அவதூறாகப் பேசியதாக எழும்பூர் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அவரை கைது செய்ய போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், வீடு பூட்டியே இருந்ததாகவும், வெளியூர் சென்றுவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. அப்போது, ஐதராபாத்தில் தான் இருக்கும் இடத்தை மறைத்து வைத்திருந்தார். அதன்பிறகு, தயாரிப்பாளர்கள் உதவியுடன் நடிகை கஸ்தூரி ஐதராபாத்தில் தஞ்சம் புகுந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
அவரைத் தேடி ஹைதராபாத் போலீஸாரின் உதவியுடன் தமிழக போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கைக்குப் பிறகு, நடிகை கஸ்தூரியை ஐதராபாத்தில் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பொது இடங்களில் பேசும் சுதந்திரத்தைப் பயன்படுத்தும் பிரபலங்கள், மற்றவர்களிடம் அதீத குரோத உணர்வுகளைத் தூண்டினால் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். கஸ்தூரி மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, அதில் 4 ஜாமீனில் வெளிவர முடியாதது.
இந்நிலையில், நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை சென்னைக்கு அழைத்து வருவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.