புதுடெல்லி: பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும், அந்த மாநிலத்துக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்றும் ஐக்கிய ஜனதா தள தலைவரும், முதல்வருமான நிதிஷ்குமார் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்.
ஆனால் இந்த கோரிக்கையை மத்திய அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை. ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய லோக்தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைத்துள்ளது.
மேலும், ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசில் முக்கிய கட்சியாக ஐக்கிய ஜனதா தளம் உள்ளதால், பீகார் மாநிலத்துக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அக்கட்சி கையில் எடுத்துள்ளது.
இதன் மூலம் தங்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-
பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இப்போது எழவில்லை. பீகார் மாநிலம் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ளவும், பீகார் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டும் இந்த கோரிக்கையை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம்.
தற்போதைய தேசிய செயற்குழு கூட்டத்தில் இதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இது ஒன்றும் புதிதல்ல. நீட் தேர்வு முறைகேடு விவகாரம் குறித்தும் கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது.
நாட்டில் உள்ள முக்கியமான போட்டித் தேர்வுகளின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க, தேர்வு சரியான முறையில் நடத்தப்படுகிறது என்ற பெற்றோர் மற்றும் மாணவர்களின் நம்பிக்கையைப் பேண வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.