மணிப்பூர்: ஆதரவு வாபஸ்… தொடர் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் பா.ஜ.க. தலைமையிலான அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தேசிய மக்கள் கட்சி (NPP) அறிவித்தது.
நெருக்கடியை தவிர்க்கவும், இயல்பு நிலையை மீட்டெடுக்கவும் பிரேன் சிங் ஆட்சி முழுமையாக தவறிவிட்டது என தேசிய மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூர் சட்டசபையில் தேசிய மக்கள் கட்சிக்கு 7 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். கடந்த சில நாட்களில், மணிப்பூரில் நிலைமை மேலும் மோசமடைந்து, பல அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளன.
மாநிலத்தில் உள்ள மக்கள் “பெரும் துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர்” என்று தேசிய மக்கள் கட்சி பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியுள்ளது.
“பிரேன் சிங் தலைமையிலான மணிப்பூர் மாநில அரசு நெருக்கடியைத் தீர்க்கவும், இயல்பு நிலையை மீட்டெடுக்கவும் முற்றிலும் தவறிவிட்டது என்பதை நாங்கள் உறுதியாக உணர்கிறோம்.”
“தற்போதைய சூழ்நிலையை மனதில் கொண்டு, தேசிய மக்கள் கட்சி மணிப்பூர் மாநிலத்தில் பிரேன் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை உடனடியாக வாபஸ் பெற முடிவு செய்துள்ளது” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.