மகாராஷ்டிரா: நடிகையும், பாஜக முன்னாள் எம்.பியுமான நவ்நீத் கவுர் ராணா மீது மகாராஷ்டிரா பிரசாரத்தின் போது சேர்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20ஆம் தேதி ஒரேகட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 23ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தலை முன்னிட்டு மகாராஷ்டிர அரசியல் களத்தில் உள்ளூர் தலைவர்கள் முதல் தேசிய தலைவர்கள் வரை அனல் பறக்கும் பிரசரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜகவின் மாகாயுதி கூட்டணிக்கும், காங்கிரசின் மகா விகாஸ் அகாதி கூட்டணிக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், நடிகையும், பாஜக முன்னாள் எம்.பியுமான நவ்நீத் கவுர் ராணா மீது மகா. பிரசாரத்தின் போது சேர்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டம் ஹலார் கிராமத்தில் நேற்று இரவு 9 மணியளவில் பாஜக தேர்தல் பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக கூட்டணியின் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள பாஜக முன்னாள் எம்.பி. நவ்நீத் கவுர் ராணா சென்றிருந்தார்.
அங்கு திரண்டிருந்த பொதுமக்களில் சிலர் முன்னாள் எம்.பி. நவ்தீப் கவுர் ராணா மற்றும் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தினர். கவுர் ராணா மீது கற்கள், நாற்காலியை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக ராணா போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் 45 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.