சென்னை: தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி, அடுத்தடுத்த வழக்குகளில் கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
பிராமணர் உட்பட அனைத்து சமூகத்திற்கும் பி.சி.ஆர். என்றழைக்கப்படும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் சென்னையில் நவம்பர் 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் திரைப்பட நடிகை கஸ்தூரியும் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் தெலுங்கு மக்களை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதையடுத்து, கஸ்தூரி மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், எழும்பூர் போலீஸார் கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
அவருக்கு சம்மன் அளிக்க சென்றபோது, அவரது வீடு பூட்டியிருந்தது. அதன்பின், அவர் தலைமறைவானதால், தனிப்படை போலீசார் தேடி வந்தனர். முன்னதாக, அவர் முன்ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பதுங்கியிருந்த நடிகை கஸ்தூரியை போலீசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். பின், நேற்று முன்தினம், சென்னைக்கு அழைத்து வந்து, ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர்.
பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். நடிகை கஸ்தூரி சிறையில் தூக்கம் வராமல், சரியாக சாப்பிடாமல் அவதிப்படுவதாக கூறப்படுகிறது. இது தவிர கஸ்தூரி மீதான அடுத்தடுத்த வழக்குகளில் அவரை கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் முடுக்கிவிட்டதாக தெரிகிறது. சென்னையை பொறுத்த வரை கோயம்பேடு மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் உள்ளது.
இதேபோல் இவர் மீது மதுரை, கோவை, கும்பகோணம் ஆகிய இடங்களில் 6 புகார்கள் உள்ளன. இந்த வழக்கில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதுதவிர நடிகை கஸ்தூரி சார்பில் வழக்கறிஞர் டி.ஆர். எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் பிரபாகரன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதில், நான் தனியாக வசிக்கிறேன். கணவர் ஆதரவு இல்லை. நான் தலைமறைவாகவில்லை. சென்னையில் உள்ள என் வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டியது எனக்கு தெரியாது. என்னை சிறையில் அடைத்தால் என் குழந்தை பாதிக்கப்படும். எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.