திருநெல்வேலி: திருநெல்வேலியில் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் கள ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநகர மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளரும், தற்போதைய அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளருமான பாப்புலர் முத்தையா பேசும் போது சலசலப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அதிமுக படுதோல்வி அடைந்தது குறித்து அவர் பேசியது மாவட்டச் செயலாளரின் ஆதரவாளர்களை கொதிப்படையச் செய்தது. இதையடுத்து, மாவட்ட செயலாளர் கணேஷ்ராஜா ஆதரவாளர்களுக்கும், பாப்புலர் முத்தையா ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவர்களை கலைந்து செல்லும்படி எஸ்பி வேலுமணி உத்தரவிட்டார். அவரது சமரசத்துக்குப் பிறகு கூட்டத்தில் இயல்பு நிலை திரும்பியது.