மும்பை: மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி 222 இடங்களை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. இதில், பாஜக 126 இடங்களிலும், சிவசேனா 55 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) 39 இடங்களிலும் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளன.
இதனால் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மஹாயுதி கூட்டணி வெற்றி பெறும் தருவாயில் உள்ளதை அடுத்து, அவரது ஆதரவாளர்கள் தானே நகரில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே, “இது மிகப்பெரிய வெற்றி. மகாராஷ்டிரா வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மகாயுதி அமோக வெற்றி பெறும் என்று கூறியிருந்தேன். விவசாயிகள், மூத்த குடிமக்கள் உட்பட சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2.5 ஆண்டுகளில் மகாயுதி செய்த பணிக்கான அங்கீகாரம் இது.
மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த ஏக்நாத் ஷிண்டே, “இறுதி முடிவுகள் வரட்டும். அதன் பிறகு, நாங்கள் ஒன்றாக தேர்தலில் போட்டியிட்டது போல், மூன்று கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து (யார் முதல்வர் என்பதை) முடிவு செய்யும். இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோருக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தார். நாக்பூரில் போட்டியிட்ட துணை முதல்வரும், பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் வெற்றிப் பக்கம் உள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவரது தாயார் சரிதா ஃபட்னாவிஸ், “நிச்சயம் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக வருவார். மாநிலத்தின் தலைசிறந்த தலைவராக வலம் வந்த எனது மகனுக்கு இது ஒரு பெரிய நாள். 24 மணி நேரமும் கடுமையாக உழைத்தார் எனக் குறிப்பிட்டுள்ளார்.