ஒட்டோவா: ஜூன் 18, 2023 அன்று, காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரேயில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனேடிய அரசு குற்றம் சாட்டியது. இது தொடர்பாக இரு நாடுகளும் பரஸ்பரம் தூதரக அதிகாரிகளை வெளியேற்றின.
இந்நிலையில், கனடாவின் முன்னணி நாளிதழான குளோப் அண்ட் மெயிலில் கடந்த 20-ம் தேதி செய்தி வெளியானது. பெயர் குறிப்பிட விரும்பாத கனேடிய பாதுகாப்பு அதிகாரியை மேற்கோள்காட்டி அந்த அறிக்கையில், “ஹர்தீப் சிங் நிஜ்ஜாரைக் கொல்லும் சதித்திட்டம் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் முன்கூட்டியே அறிந்திருந்தனர்” என்று கூறியுள்ளது.
நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய தூதரக அதிகாரிகளை மட்டும் குற்றம் சாட்டி வந்த கனேடிய அரசு, முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடியை குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “நாங்கள் பொதுவாக ஊடக அறிக்கைகள் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை. எனினும், இதுபோன்ற அபத்தமான, அபத்தமான செய்திகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சதி நடக்கிறது. இத்தகைய நடவடிக்கைகள் இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவை கடுமையாக பாதிக்கும்” என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நதாலி ஜி ட்ரூயின் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-
கனடாவில் பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனால்தான் கனடாவில் நடந்த கடுமையான குற்றங்களில் (நிஜ்ஜார் கொலை வழக்கு) இந்திய அரசாங்கத்தின் முகவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக கனேடிய காவல்துறையும் அதிகாரிகளும் பகிரங்கமாக குற்றம் சாட்டினர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் கனடாவில் நடந்த கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாக கனேடிய அரசு ஒருபோதும் கூறவில்லை. இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தி ஊகமானதும் தவறானதுமாகும்.