புதுடெல்லி: 3 நாடுகள் அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, கடந்த 5 நாட்களில் மட்டும் 31 நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவுக்கு பிரதமர் மோடி கடந்த 16ம் தேதி சென்றார்.
அதன்பிறகு, கடந்த 18 மற்றும் 19ம் தேதிகளில் தென் அமெரிக்க நாடான பிரேசில் சென்ற பிரதமர் மோடி, அங்கு நடந்த ஜி-20 மாநாட்டில் பங்கேற்றார். கடந்த 19ம் தேதி பிரேசிலில் இருந்து தென் அமெரிக்க நாடான கயானா சென்ற அவர் நேற்று நாடு திரும்பினார்.
பிரதமர் மோடி தனது 5 நாள் அரசுமுறை பயணத்தில் 31 நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில் அந்நாட்டு அதிபர் போலா அகமது டினுபுவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார்.
அதன்பின், பிரேசிலில் நடந்த ஜி-20 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, இந்தோனேசியா, போர்ச்சுகல், இத்தாலி, நார்வே, பிரான்ஸ், பிரிட்டன், சிலி, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இது தவிர அமெரிக்கா, சிங்கப்பூர், தென்கொரியா, எகிப்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசினார். இதனிடையே, இந்த சந்திப்பின் போது, உலக வர்த்தக அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை, உலக சுகாதார நிறுவனம், சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச அமைப்புகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
அதன்பின், கரீபியன் நாடான கயானா சென்ற பிரதமர் மோடி, டொமினிகா, பஹாமாஸ், டிரினிடாட் மற்றும் டொபாகோ, சுரினாம், பார்படாஸ், ஆன்டிகுவா, செயின்ட் லூசியா உள்ளிட்ட தீவு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.