சென்னை: மீன் என்றால் அசைவ பிரியர்களுக்கு செமத்தியாக பிடிக்கும். ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். மீனில் கட்லெட் செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையானவை: 200 கிராம் மீன், 100 கிராம் உருளைக்கிழங்கு, 1பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது, 2 வெங்காயம், 1 மேசைக்கரண்டி மிளகாய்த் தூள், 1/2 மேசைக்கரண்டி தனியா தூள், 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள், 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1/2 தேக்கரண்டி மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு, 1 மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு, 1/2 கப் ரவை, 1முட்டை, தேவையான அளவு எண்ணெய்.
செய்முறை: மீனை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்ஒரு வாணலியில் தண்ணீர் சேர்த்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்த மீனை சேர்த்து நன்றாக வேகவைத்து எடுக்கவும் வெந்ததும் மீன் முள் நீக்கி பொடியாக உதிர்ந்து விடவும்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாயை சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வதங்கியதும் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள, தனியா தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் அதில் வேக வைத்துள்ள மீனை சேர்த்து சிறிது நீர் தெளித்து மசாலா நன்றாக இறங்கும் வரை வதக்கவும்.
வதங்கியதும் வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக கிளறி விடவும். பின்னர் அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். இந்த கலவை ஆறியதும் உருண்டையாக உருட்டி சிறு தட்டைகளாக தட்டி வைக்கவும்.
முட்டையை உப்பு மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடித்து வைத்து கொள்ளவும். உருட்டிய தட்டைகளை முட்டை கலவையில் முக்கி ரவையில் பிரட்டி வைத்து கொள்ளவும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரட்டிய தட்டைகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சூடான மீன் கட்லெட் தயார்.