புதுடெல்லி: மதுக்கொள்கை முறைகேடுகள் தொடர்பான சிபிஐ வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஜூலை 12ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 26ம் தேதி சிபிஐயால் கைது செய்யப்பட்டார். அன்றைய தினம் அவர் டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அமிதாப் ராவத் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.யின் கோரிக்கையை ஏற்று 3 நாட்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது.
3 நாட்கள் காவல் முடிந்த நிலையில் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜூலை 12ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.இதையடுத்து, கெஜ்ரிவால் மீண்டும் திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த வழக்கில் டெல்லி முன்னாள் அமைச்சர் மணீஷ் சிசோடியா, பாரத் ராஷ்டிர சமிதி மூத்த தலைவர் கவிதா உள்ளிட்ட 17 பேர் மீது 4 குற்றப்பத்திரிகைகளை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. ஆனால், இதுவரை எந்த குற்றப்பத்திரிகையிலும் கெஜ்ரிவாலின் பெயர் இடம் பெறவில்லை.
மதுக் கொள்கை முறைகேடு காரணமாக ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்த ரூ.100 கோடியில் ரூ. ஜூன் 2021 முதல் ஜனவரி 2022 வரை தேர்தல் பிரச்சார நோக்கங்களுக்காக ‘ஹவாலா சேனல்கள்’ மூலம் 44.45 கோடி கோவாவிற்கு கட்சியால் மாற்றப்பட்டது என்று சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இதே வழக்கில் கெஜ்ரிவாலை ஏற்கனவே அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.