சென்னை: பராரி திரைப்படத்தை பார்த்த வி.சி.க தலைவரான திருமாவளவன் படத்தை பாராட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான திரைப்படமாக ஜோக்கர் மற்றும் குக்கூ திரைப்படங்கள் பார்க்கப்படுகிறது. இப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ராஜு முருகன். இவர் தற்பொழுது பராரி என்ற திரைப்படத்தை வழங்கியுள்ளார்.
பராரி திரைப்படத்தை எழில் பெரியவேடி இயக்கியுள்ளார். இவர் ராஜு முருகனின் உதவி இயக்குனராக இருந்தவராவார். இப்படத்தில் பெரும்பாலானோர் புதிய முக நடிகர்களாக அறிமுகமாகவுள்ளனர். படத்தின் முன்னணி கதாப்பாத்திரத்தில் ஹரிசங்கர் மற்றும் சங்கீதா கல்யாண் நடித்துள்ளனர். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
உமா தேவி பாடல் வரிகளை எழுதியுள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை சாம் மேற்கொண்டுள்ளார்.
மொழி, ஜாதி, கலப்பு திருமணம் ஆகியவற்றை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது. திரைப்படம் நேற்று வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று பராரி திரைப்படத்தை பார்த்த வி.சி.க தலைவரான திருமாவளவன் படத்தை பாராட்டியுள்ளார். அவர் கூறியதாவது ” இன வெறியையும் ஜாதி வெறியையும் தூண்டும் அமைப்பு ஒழிக்கப்பட வேண்டும். உழைக்கிற மக்கள் இயல்பாகவே வாழவேண்டும். இதை மிகவும் பொறுப்புணர்வோடு இயக்குனர் படத்தை இயக்கியுள்ளார். எழில் பெரியவேடி எடுத்த இந்த முயற்சிக்கு பாராட்டுகள். இத்திரைப்படத்தை அனைவரும் வந்து பார்க்க வேண்டும் . இது மாதிரியான படங்களை வெகு ஜனங்களுக்கு சென்று சேர்க்க வேண்டும்” .