நாகர்கோவில்: நாகர்கோவில் ஒழிகினச்சேரியில் புதிய ரயில்வே மேம்பாலத்துக்கான கர்டர் இணைக்கும் பணி நேற்று தொடங்கியது. நாகர்கோவில் மற்றும் திருவனந்தபுரம் இடையே உள்ள ரயில் பாதை நாகர்கோவில் ஒழிகினச்சேரி பகுதி வழியாக செல்கிறது. தற்போது இந்த பகுதியில் இரட்டை ரயில் பாதைக்காக கூடுதல் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனை கருத்தில் கொண்டு தற்போதுள்ள ரயில்வே மேம்பாலம் அருகே புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வந்தது. பழைய ரயில்வே மேம்பாலத்தை கடந்த ஜனவரி மாதம் இடிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் புதிய ரயில்வே மேம்பாலம் கட்டி செயல்பாட்டுக்கு வரும் வரை பழைய ரயில்வே மேம்பாலத்தை இடிக்க வேண்டாம் என நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து பழைய ரயில்வே மேம்பாலத்தை இடிக்காமல் தற்காலிக போக்குவரத்துக்கு பழைய ரயில்வே மேம்பாலம் பலப்படுத்தப்பட்டு போக்குவரத்து தொடங்கியது. அதன்பின், புதிய ரயில்வே மேம்பாலம் பணி நிறுத்தப்பட்டது. சில மாதங்களுக்கு முன், பாலத்தின் நடுப்பகுதிக்கான கர்டர்கள் கொண்டு வரப்பட்டது. ஒழுகினசேரி ரயில்வே மேம்பாலம் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் தற்போது கர்டர்களை இணைக்கும் பணி தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக பாலத்தின் நடுப் பகுதியில் இருபுறமும் அமைக்கப்படவுள்ள அலங்கார வளைவுக்கான கர்டர்கள் அமைக்கும் பணி நேற்று காலை பெரிய கிரேன் மூலம் தொடங்கியது.
இதற்காக இரண்டு பெரிய கிரேன்கள் வரவழைக்கப்பட்டு கர்டர்கள் இணைக்கப்பட்டன. பின்னர் அவற்றை மேம்பாலத்தின் நடுவில் வைக்கும் பணி தொடங்கியது. இந்த அலங்கார வளைவு இருபுறமும் சென்னை நேப்பியர் பாலம் வளைவை ஒத்திருக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. இரண்டு அலங்கார வளைவுகள் ஒவ்வொன்றும் 47 டன் எடை கொண்டது. அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்ட பின், நடுவில் கர்டர்கள் அமைத்து கான்கிரீட் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 2025 மார்ச் அல்லது ஏப்ரல் இறுதிக்குள் பணிகள் முடிவடையும் என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.