சென்னை: தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை லேசான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “சுமார் 1.5 கிமீ உயரம் வரை, தெற்கு ஒடிசா முதல் மன்னார் வளைகுடா வரை, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று மாலை 4 மணி வரை 4 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை லேசான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.