திருப்பதி: திருப்பதி லட்டு பிரசாதத்தின் தரம் மற்றும் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கில், மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்துடன் திருமலை திருப்பதி தேவஸ்தானம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக எழுந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து, தரக்கட்டுப்பாட்டை மேலும் வலுப்படுத்த தேவஸ்தானம் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்திய அரசின் கீழ் செயல்படும் மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் (CFTRI) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் லட்டு தயாரிப்பு, சேமிப்பு மற்றும் பேக்கேஜிங் முறைகள் அறிவியல் ரீதியாக மேம்படுத்தப்பட உள்ளன. மேலும், தரமற்ற அல்லது கலப்பட மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நவீன கண்காணிப்பு முறைகளும் அமல்படுத்தப்பட உள்ளன.
லட்டு தயாரிப்பில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், நெய்யின் தரம் மற்றும் தூய்மையை சோதிப்பதற்கான மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகளும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் பக்தர்களின் நம்பிக்கை மேலும் வலுப்பெறும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.