உக்ரைன்: உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட புதிய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். கீவ் நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயத்தின் ஒரு பகுதியும் தீக்கிரையாகியுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் உக்ரைன் – ரஷ்யா போரில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. உக்ரைனின் டொனெஸ்க், சபோரிஷியா மற்றும் கெர்சன் உள்ளிட்ட பல பகுதிகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல்களில் 11 பேர் உயிரிழந்ததுடன், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பல கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, கீவ் நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கீவ்-பெச்செர்ஸ்க் லாவ்ரா தேவாலயத்தின் ஒரு பகுதி தீப்பற்றி எரிந்துள்ளது.
இதுகுறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, சர்வதேச நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.