இங்கிலாந்து: இங்கிலாந்து கடற்பகுதிக்கு அருகே ரஷிய போர்க்கப்பல் எச்சரிக்கை துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரஷிய எண்ணெய் ஏற்றிச் செல்லும் தடை செய்யப்பட்ட கப்பல்களின் இயக்கத்தை இங்கிலாந்து கடற்படை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
சமீபத்தில் ரஷியாவின் நிழல் கப்பல்களில் ஒன்றை இங்கிலாந்து அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இங்கிலீஷ் கால்வாய் அருகே இங்கிலாந்து படகை நோக்கி ரஷிய போர்க்கப்பல் எச்சரிக்கை துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்தின் கடற்பகுதிக்கு வெளியே சுமார் 20 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக இங்கிலாந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.