திருவாடானை: இந்திய ஒருமைப்பாடு மற்றும் அமைதியை வலியுறுத்தும் நோக்கில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் மனிஷ் மவுரியா நாடு முழுவதும் சைக்கிளில் பயணம் செய்து வருகிறார். திருவாடானை அருகே அவருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதான மனிஷ் மவுரியா, இந்திய ஒருமைப்பாடு மற்றும் அமைதி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த 2025 செப்டம்பர் மாதம் தனது சொந்த ஊரிலிருந்து பயணத்தை தொடங்கிய அவர், பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்கள் வழியாக ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்து ராமேஸ்வரம் சென்றடைந்தார்.
அங்கிருந்து திருப்பதியை நோக்கி பயணம் மேற்கொண்டிருந்த அவர், திருவாடானை அருகே உள்ள பெரிய கீரமங்கலம் பகுதியில் வந்தபோது கிராம மக்கள் அவரை வரவேற்று பாராட்டினர்.
இதுகுறித்து மனிஷ் மவுரியா கூறுகையில், “இந்தியா முழுவதும் சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு. இதுவரை 10 ஆயிரம் கிலோமீட்டருக்கும் மேல் பயணம் செய்துள்ளேன். சென்னை வழியாக ஆந்திரா சென்று திருப்பதி கோயிலில் தரிசனம் செய்ய உள்ளேன். மொழி, மதம், இனம் ஆகிய வேறுபாடுகளை தாண்டி இந்திய ஒருமைப்பாடு மற்றும் அமைதியை வலியுறுத்துவதே இந்த பயணத்தின் நோக்கம்” என்றார்.
இளைஞரின் இந்த முயற்சி பலரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது.