ராமேஸ்வரம்: மீன்பிடித் தடைக்காலம் முடிந்து கடலுக்குச் சென்ற ராமேசுவரம் விசைப்படகு மீனவர்களுக்கு முதல் நாளிலேயே ஏராளமான மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி நிலவுகிறது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் அமல்படுத்தப்படும் மீன்பிடித் தடைக்காலம் ஜூன் 14-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் மீண்டும் கடலுக்குச் சென்று மீன்பிடி பணிகளை தொடங்கினர்.
சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,500-க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். அவர்கள் பிடித்த மீன்களுடன் நேற்று அதிகாலை முதல் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திற்குத் திரும்பத் தொடங்கினர்.
முதல் நாளிலேயே சுமார் 2 லட்சம் கிலோ இறால், கணவாய், நண்டு உள்ளிட்ட ஏற்றுமதி தர மீன்களும், 3 லட்சம் கிலோ அளவிலான பிற வகை மீன்களும் கிடைத்துள்ளன. இவற்றின் மொத்த சந்தை மதிப்பு ரூ.10 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதிகளவில் இறால் மீன்கள் கிடைத்ததால், வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்யாமல் நேரடியாக கொள்முதல் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தடைக்காலம் முடிவதற்கு முன்பாக டோக்கன் பெறாமல் கடலுக்குச் சென்ற சில விசைப்படகுகளுக்கு டீசல் மானியத்தை ரத்து செய்வது குறித்து மீன்வளத்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.