சென்னை: மின் விநியோகத்தை வலுப்படுத்தும் நோக்கில் ரூ.15,032 கோடி செலவில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற எரிசக்தித்துறை ஆய்வுக்கூட்டத்தில், மாநிலத்தின் மின் உற்பத்தி, மின் தேவை, விநியோகம் மற்றும் மின் கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
தமிழகத்தில் தற்போது மின் உற்பத்தி மற்றும் மின் கொள்முதல் போதுமான அளவில் இருப்பதால் மின்தட்டுப்பாடு எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், பழமையான மின் உபகரணங்கள், நிலத்தடி கேபிள் பழுதுகள், அதிகரித்த மின் பயன்பாடு மற்றும் சாலைப் பணிகளின் போது கேபிள்கள் சேதமடைவது போன்ற காரணங்களால் சில இடங்களில் மின்தடைகள் ஏற்படுகின்றன.
இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், சென்னை மாநகரில் மட்டும் ரூ.2,275 கோடி மதிப்பில் மின் விநியோக கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
மாநிலம் முழுவதும் ரூ.10,109 கோடியில் 121 புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் ரூ.15,032 கோடி செலவில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மின்தடைகள் குறித்த புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கவும், 15,058 மின்வாரிய பணியாளர்களை முறையாக நியமிக்கவும், ரோந்து பணிகளை தீவிரப்படுத்தவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.