சென்னை: அதிமுகவைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து கட்சி மாறிய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேர் ராஜினாமா செய்து வேறு கட்சியில் இணைந்த விவகாரத்தில் குதிரைப் பேரம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு, போதுமான ஆதாரங்கள் இல்லாமல் வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என தெரிவித்தது.
மேலும், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து கட்சி மாறியதையே ஊழல் அல்லது குற்றச்செயலாக கருத முடியாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதையடுத்து சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.