ஸ்லோவாக்கியா: ஸ்லோவாக்கியா பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அந்நாட்டு பிரதமர் ராபர்ட் பிகோ இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, பாதுகாப்பு, கல்வி, டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்கான ஒரு வார அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று ஸ்லோவாக்கியாவின் தலைநகர் பிராடிஸ்லாவாவுக்கு சென்றடைந்தார்.
அங்கு வாழும் இந்தியர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் பிகோவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, இந்தியா – ஸ்லோவாக்கியா இடையேயான பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் இடையேயான பரஸ்பர நம்பிக்கையையும், மூலோபாய உறவுகளையும் வலுப்படுத்தும் என தெரிவித்தார்.
கூட்டு ஆய்வு, உற்பத்தி, தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்பட இந்த ஒப்பந்தங்கள் வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் தொழில்நுட்பம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழிலாளர் இடப்பெயர்வு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.