சென்னை: தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிதமான மழையும், தேனி மாவட்டத்தில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று (ஜூன் 16) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், நாமக்கல், சேலம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
தேனி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
நாளை ஜூன் 17 மற்றும் 18-ம் தேதிகளில் தமிழகத்தின் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 19 முதல் 21-ம் தேதி வரை மாநிலத்தின் சில பகுதிகளில் மிதமான மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட உயரக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.