தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், சிவகாமி புரம் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் ஒன்றில் இருந்து கடந்த சில நாட்களாக தொடர்ந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.
தஞ்சாவூர் அருகே சிவகாமிபுரம் கிராமத்தின் சாலையோரம் அமைந்துள்ள குடிநீர் குழாயில் முறையான பைப் இல்லாததால் குடிநீர் இடைவிடாமல் வெளியேறி அருகில் உள்ள காலி இடத்திலும், சாலையோரத்திலும் தேங்கி நிற்கிறது. இதனால் நாள்தோறும் குடிநீர் வீணாகி வருகிறது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தரப்பில் கூறப்படுவதாவது:
நீர் பற்றாக்குறை நிலவும் இக்காலகட்டத்தில், பல பகுதிகளில் குடிநீருக்காக மக்கள் அலைந்து திரிகின்றனர். ஆனால், எங்கள் பகுதியில் உள்ள இந்த பொதுக் குழாயில் இருந்து பல நாட்களாக தண்ணீர் தொடர்ந்து வீணாகக் கொட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் அப்பகுதியில் சேறும் சகதியுமாக மாறி கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
எனவே அதிகாரிகள் வீணாகும் தண்ணீரை தடுக்கும் வகையில் அந்த குழாயில் பைப் பொருத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.