சென்னை: பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தையொட்டி, தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். அவர் தனது X பக்கத்தில் பகிரப்பட்ட பதிவில், “சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம் முன்பை விட நம்பிக்கைக்குரியதாக இருந்தாலும், அவர்களின் பாதுகாப்பு இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. பெண் விடுதலை பற்றி பேசும் தமிழகத்தில், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் நடந்து வருகிறது என்ற செய்தி வருத்தமளிக்கிறது.
பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்கொடுமைகளை தடுக்க, ஆட்சியாளர்கள் நீதித்துறையின் துணையுடன் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு தனி இணையதளத்தை அரசு உருவாக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பரிந்துரை செய்துள்ளது. இதை அங்கீகரிக்கும் வகையில், சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு தினத்தில், தனி இணையதளம் உருவாக்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, தமிழக அரசை வலியுறுத்துகிறேன்,” என்றார்.