அஜர்பைஜான்: காலநிலை நிதி தொகுப்பை 3 மடங்கு உயர்த்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இதனால் 2035 ம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 300 பில்லியன் டாலர்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை இந்தியா நிராகரித்துள்ளது.
காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை நிர்வகிக்கவும், காலநிலை சார்ந்த பிரச்சினைகளை சமாளிக்கவும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்கி வருகின்றன. இதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை நிதி தொகுப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிதி தொகுப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாநாட்டில் ஒப்பந்தம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் டாலர் வழங்க இலக்கு நிர்ணயிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இது தொடர்பாக அஜர்பைஜானில் நடைபெற்ற காலநிலை மாநாட்டின் நிறைவு நாளில் நிதி தொகுப்பு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் காலநிலை நிதி தொகுப்பை மூன்று மடங்கு உயர்த்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இதனால் 2035 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 300 பில்லியன் டாலர்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை இந்தியா நிராகரித்துள்ளது. மாநாட்டின் நிறைவில் இந்தியா சார்பில் பங்கேற்ற பொருளாதார விவகாரத்துறை ஆலோசகர் காந்தினி ரெய்னா, “இந்த நிதி மிகவும் குறைவான ஒன்று, மற்றும் மிகவும் தாமதமானது. வளர்ந்த நாடுகள் தங்களின் பங்களிப்பை வழங்க விரும்பவில்லை என்பதை இந்த முடிவு தெளிவாக எடுத்துரைக்கிறது. நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம்,” என தெரிவித்துள்ளார்.