மதுரை: மாற்றுத் திறனாளிகளுக்கு ரயிலில் பயணம் செய்ய 75 சதவீத கட்டணச் சலுகை அளிக்கப்படுகிறது. இந்தச் சலுகையைப் பெற கடந்த காலங்களில் அரசு மருத்துவரிடம் பெற்ற மருத்துவச் சான்றிதழைப் பயன்படுத்திக் கட்டணச் சலுகை வழங்கப்பட்டது. இதன் பிறகு அடையாள அட்டை பயன்படுத்தும் முறை அமலுக்கு வந்தது. இந்த அட்டையைப் பெற, கோட்ட ரயில்வே அலுவலகங்களுக்குச் சென்று உரிய சான்றிதழ்களைச் சமர்ப்பித்து, அடையாள அட்டையைப் பெற வேண்டும்.
இந்த நடைமுறைகளை எளிதாக்கும் வகையில், மாற்றுத்திறனாளிகள் தாங்கள் இருந்த இடத்திலிருந்தே அடையாள அட்டை பெறுவதற்கான புதிய ஆன்லைன் வசதியை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற https://divyangjanid.indianrail.gov.in/ என்ற இணையதள முகவரியில் தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
உரிய பரிசீலனைக்குப் பிறகு, இணையதளம் மூலம் அடையாள அட்டையும் வழங்கப்படும். இந்த அடையாள அட்டையைப் பயன்படுத்தி, ரயில்வே டிக்கெட் பதிவு அலுவலகங்களிலோ அல்லது இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் இணையதளம் மூலமாகவோ டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இதேபோல், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை டிக்கெட் பதிவு அலுவலகங்களில் அல்லது யுடிஎஸ் செயலி மூலம் அடையாள அட்டையைப் பயன்படுத்தி முன்பதிவு செய்யலாம்.
இந்த புதிய அமைப்பு எளிதான அணுகலை வழங்குகிறது. இது நேர விரயத்தையும் தவிர்க்கும். மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணச் சலுகை விதிகளும் இந்த இணையதளத்தில் உள்ளதாக மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.