புதுடெல்லி: டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்து கடுமையான நிலையை எட்டியதால், நவம்பர் 18-ம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஆன்லைனில் வகுப்புகளை நடத்தவும் அறிவுறுத்தியுள்ளது. இதேபோல், மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டனர்.
இந்நிலையில் டெல்லியில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளது. நேற்று, மோசமான பிரிவில் இருந்த காற்றின் தர மதிப்பெண் 285 ஆக பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தபோது, பெற்றோர்கள் குழு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி, ‘மதிய உணவை நம்பியிருந்த லட்சக்கணக்கான மாணவர்கள் பள்ளிகள் மூடப்பட்டதால் அவதிப்படுகின்றனர்.
இன்னும் பல மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் படிக்கும் வசதி இல்லை. காற்று சுத்திகரிப்பு கருவிகள் இல்லை’ என வாதிட்டார். இதையடுத்து டெல்லியில் பள்ளி, கல்லூரிகளை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.
மேலும் டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலைக்கு சென்றதற்கு காரணமான டெல்லி அரசு மற்றும் டெல்லி காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க காற்று தர மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நவம்பர் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.