சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு பூமத்திய ரேகை இந்திய பெருங்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது இன்று மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் இலங்கை கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளது.
இது மேலும் வலுப்பெற்று புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புயல் உருவாகும் பட்சத்தில் அதற்கு பெங்கால் என பெயரிட வாய்ப்புள்ளது. இந்த பெயர் சவுதி அரேபியாவால் வழங்கப்பட்டது. இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது திருகோணமலைக்கு தென்கிழக்கே சுமார் 310 கி.மீ தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து தென்-தென்கிழக்கே 590 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்-தென்கிழக்கே 710 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்-தென்கிழக்கே 800 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று நவம்பர் 27-ம் தேதி சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது. அதன்பின், வடக்கு-வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி 2 நாட்களுக்கு நகர்ந்து இலங்கை கடற்கரையை நோக்கி நகரும். தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது,” என்றார். வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு ஃபெங்கால் என்று பெயரிடப்படும். சவூதி அரேபியா பரிந்துரைத்த பெயர் இது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் திங்கள்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு முதல் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று முதல் 3 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியிலும், புதுச்சேரியில் காரைக்காலிலும் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 3 செ.மீ மழையும், கோடம்பாக்கம், ஆலந்தூர், ஐஸ் ஹவுஸ், ஒய்.எம்.சி.ஏ.நந்தனம், நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகம், தேனாம்பேட்டை, எம்ஜிஆர் நகர், டிஜிபி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஒரு செ.மீ மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.