சென்னை: மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) பொதுச் செயலர் எஸ்.ராஜேந்திரன், மின் வாரியத் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2023 டிசம்பர் 1 முதல் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். அதற்கான பேச்சுவார்த்தை குழுவை மின்சார வாரிய நிர்வாகம் இதுவரை அமைக்கவில்லை. இதற்கு முன் நடந்த பேச்சுவார்த்தையிலும் சம்பளம் உயர்த்தப்படவில்லை. ஏறத்தாழ 60 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளதால் அனைவரும் கூடுதல் பணிச்சுமையுடன் பணிபுரிகின்றனர்.
எனவே, அனைத்து ஊழியர்களுக்கும் அடிப்படை சம்பளத்தில் 25 சதவீதம் உயர்த்தி, ஊதிய உயர்வு வழங்க வேண்டும். சேவை வெயிட்டேஜ் முறையான முறையில் வழங்கப்பட வேண்டும். தொடக்கநிலை பணியிடங்களான கள உதவியாளர், கணக்காளர், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் இதர பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அதில் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை முடிந்து ஒப்பந்தம் முடிவடையும் வரை இடைக்கால நிவாரணமாக மாதந்தோறும் ரூ. 5,000 வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.