பெங்களூரு: வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘பெஞ்சல்’ புயல் காரணமாக, கர்நாடகாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து கர்நாடக மாநில வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு வங்கக் கடலில் கடந்த 25-ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் வளிமண்டல அடுக்குகளில் காற்று உடைந்து புயலாக வலுப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் காலை முதல் காற்றின் தாக்கம் சீரடைய துவங்கியது. இதைத் தொடர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, ‘பெஞ்சல்’ புயலாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக, கோலார், சிக்கபள்ளாப்பூர், பெங்களூரு கிராமம், ராம்நகர் ஆகிய பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துமகுரு, சாமராஜநகர் உள்ளிட்ட தென் உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் வடக்கு உள்மாவட்டங்களில் வறண்ட காற்று வீசும் என்றும், வடக்கு உள்மாவட்டங்களில் வெப்பநிலை 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் குறையும் என்றும், பெங்களூரில் பெரும்பாலும் மேகமூட்டமான வானிலை காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.