மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க., ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 280 இடங்களில் பா.ஜ.க. கூட்டணி 230 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் பா.ஜ.க. 132 இடங்களிலும், ஷிண்டே அணி 57 இடங்களிலும், அஜித் பவார் அணி 41 இடங்களிலும் வெற்றி பெற்றன. தேர்தல் முடிவுகள் கடந்த 23-ம் தேதி அறிவிக்கப்பட்டது.
அன்று, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர ஃபட்னாவிஸ், அஜித் பவார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘‘மூன்று கட்சிகளும் ஆலோசனை நடத்தி புதிய முதல்வரை தேர்வு செய்யும்’’ என்றனர். மகாராஷ்டிர அமைச்சரவையில் மொத்தம் 43 பேர் இடம்பெறலாம். 7 எம்எல்ஏக்களுக்கு ஒரு அமைச்சர் பதவி என்ற அடிப்படையில் அமைச்சர்களை நியமிக்க பாஜக கூட்டணி முடிவு செய்துள்ளது. அதன்படி, பா.ஜ.க.வுக்கு 22-24 அமைச்சர் பதவிகளும், ஷிண்டே அணிக்கு 10-12 அமைச்சர் பதவிகளும், அஜித் பவார் அணிக்கு 8-10 அமைச்சர் பதவிகளும் வழங்கப்படும்.
மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸை நியமிக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் துணை முதல்வராக இருந்தபோது உள்துறை அமைச்சகம் வசம் இருந்தது. ஏக்நாத் ஷிண்டே அணிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என பாஜக தலைமை உறுதி அளித்துள்ளது. இந்நிலையில், உள்துறை அமைச்சகத்தை தங்கள் அணிக்கு ஒதுக்க வேண்டும் என ஷிண்டே வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு ஃபட்னாவிஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சகத்தை தன்னுடன் வைத்திருக்க விரும்புகிறார். இதனால் மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவியேற்பதில் சிக்கல் நீடிக்கிறது. மகாயுதி கூட்டணியின் ஆலோசனை கூட்டங்களை ஷிண்டே தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். கடந்த 28ம் தேதி டெல்லியில் ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர ஃபட்னாவிஸ், அஜித் பவார் ஆகியோரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேசினார். அப்போதும் உடன்பாடு ஏற்படவில்லை. புதிய அமைச்சரவையில் உள்துறை அமைச்சகம் வழங்கப்படாவிட்டால் வெளியுலக ஆதரவை அளிக்க வேண்டும் என்று பாஜக கூட்டணி அரசுக்கு ஷிண்டே அணி வற்புறுத்துவதாக கூறப்படுகிறது.
எனவே, ஷிண்டேவை சமாதானப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏக்நாத் ஷிண்டே தற்போது தனது சொந்த கிராமமான சதாராவில் உள்ள வீட்டில் தங்கியுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் அவரை யாரும் வந்து சந்திக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த தலைவர் பதவியேற்பார் என துணை முதல்வர் அஜித் பவார் நேற்று தெரிவித்தார்.
இது குறித்து அவரது கட்சி வட்டாரங்கள் கூறுகையில், ‘‘பாஜக கூட்டணி அரசு டிசம்பர் 5ம் தேதி பதவியேற்க உள்ளது. புதிய அரசு பதவியேற்பது குறித்து, பா.ஜ.க., வட்டாரங்கள் கூறியதாவது: மும்பையில், டிச., 3-ல், பா.ஜ.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடக்கிறது.இதில், பா.ஜ., மூத்த தலைவர்கள் பங்கேற்று, எம்.எல்.ஏ.,க்களின் கருத்துக்களை, தனித்தனியாக கேட்பர். இதன் அடிப்படையில் மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார்.
ஷிண்டே அணி மற்றும் அஜித் பவார் அணியில் இருந்து தலா ஒரு துணை முதல்வர் தேர்வு செய்யப்படுவர். இதை அந்த கட்சிகளின் தலைமை முடிவு செய்யும். பா.ஜ.க. கூட்டணி அரசின் பதவியேற்பு விழா மும்பை ஆசாத் மைதானத்தில் டிசம்பர் 5-ம் தேதி நடைபெறுகிறது. இவ்வாறு பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.